குழந்தை வரம் தரும் கார்கோடேஸ்வரர் கோவில்

குழந்தை வரம் தரும் கார்கோடேஸ்வரர் கோவில்

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள திருநல்லூரில் கார்கோடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இறைவனாக கார்கோடேஸ்வரரும், இறைவியாக காமரதிவல்லியும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.






இத்தலம் பிரிந்த தம்பதியரை சேர்த்து வைக்கும் தலமாகவும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் தரும் கோவிலாகவும் விளங்குகிறது. பழமைவாய்ந்த இந்த தலம் கடக ராசிக்காரர்களுக்கு பரிகார தலமாகவும் திகழ்கிறது.

பாம்புகளின் அரசனான ஸ்ரீகார்கோடகன் இக்கோவிலுக்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்ததால் இங்குள்ள இறைவனுக்கு கார்கோடேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.

காமக்கடவுளான மன்மதனுக்கு உயிர்பிச்சை வேண்டி அவரது மனைவி ரதிதேவி வழிபட்டதால் இங்குள்ள அம்மனுக்கு காமரதிவல்லி என்றும் காமரசவல்லி என்றும் பெயர் வந்தது. இக்கோவிலை கி.பி.962-ம் ஆண்டு சுந்தரசோழன் (கி.பி.957-974) என்கிற ராஜகேசரிவர்மன் கட்டியதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

தலவரலாறு

தலவரலாறு முன்பு ஒரு முறை பாம்புகளின் அரசனான கார்கோடகன், பரிஷத்து என்ற முனிவருக்கு துன்பம் செய்தான். இதனால் கோபப்பட்ட முனிவர் தொழுநோயால் அவதிப்படுவாய் என்று கார்கோடகனை சபித்தார். தன்னுடைய சாப விமோசனத்திற்காக கார்கோடகன், மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டான்.

அதற்கு மகாவிஷ்ணு 'நீ கார்கோடீஸ்வரம் சென்று சிவனை நோக்கி தவம் இருந்தால், நோய் நீங்கி விடும்' என்றார். அதன்படியே கார்கோடகன், கார்கோடீஸ்வரம் வந்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தான். அவனது தவத்தை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு சாபவிமோசனம் அளித்தார்.

பரிஷத் மகாராஜா என்பவர் பாம்பு கடித்து மரணம் அடைந்தார். இதனால் கடும் கோபம் கொண்ட அவரது மகன் ஜனமேஜயன் சர்ப்பயாகம் வளர்த்தான். இந்த யாகத்தில் தேசத்தில் உள்ள அனைத்து பாம்புகளும் விழுந்து உயிரை விட்டன.

குழந்தைவரம் :

அப்போது பாம்புகளின் அரசனான கார்கோடகன் இவ்வூரில் உள்ள சிவபெருமானை கட்டிப்பிடித்து தன்னை காப்பாற்றும் படி வேண்டிக் கொண்டான். அப்போது இறைவன், இத்தலத்தில் எவரையும் நாகம் தீண்டக்கூடாது.

காள சர்ப்பதோஷம், நாக தோஷம் இருக்கக்கூடாது. பாம்பு கடித்து யாரும் இறக்கக்கூடாது என்று கார்க்கோடகனிடம் கூற அதைக்கேட்ட கார் கோடகன் அப்படியே நடப்பதாக கூறி இறைவனிடம் அதற்கான வரத்தையும் பெற்றுக் கொண்டான்.

இதனால் திருமண தடை, உத்தியோக தடை, பிரிந்த தம்பதி, குழந்தையின்மை, மன வளர்ச்சிக்குறைந்த குழந்தைகள் போன்ற குறைகளை நீக்கி நன்மை பயக்கும் சிறந்த பரிகார தலமாக இத்தலம் விளங்குகிறது. இந்த ஆலயத்துக்கு வந்து இறைவனை வணங்கி சென்றால் சொல்லத்தெரியாத, சொல்ல முடியாத வியாதிகளும் குணமாகும்.

மன்மதன் :

மன்மதன் முன்பு ஒரு காலத்தில் மக்கள் பக்தியை கைவிட்டு சிற்றின்பத்தை நாடினர். ஆன்மிக நாட்டம் கொண்ட தேவர்கள், முனிவர்கள், சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர்கள், காமனை அழிக்காவிட்டால் இந்த உலகை யாராலும் காப்பாற்ற முடியாது என்றனர். இதைக்கேட்ட சிவபெருமான் திருக்குறுக்கை என்ற இடத்தில் யோக நிலையில் அமர்ந்தார்.

அப்போது சிவபெருமானை நோக்கி மன்மதன் மலர்கனைகளை எய்தான். இதனால் யோக நிலை கலைந்த சிவபெருமான் மலர்கனைகள் வந்த திசையை நோக்கி திரும்பி பார்த்தார். அங்கு நின்று இருந்த மன்மதனை தமது நெற்றிக்கண்ணால் நோக்கினார். அதில் மன்மதன் எரிந்து சாம்பலானார்.

கணவனை இழந்த ரதி தேவி, அதே கார்கோடேஸ்வரரை நோக்கி கடும் தவம் இருந்து தன்னுடைய கணவனை உயிர்ப்பித்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். ரதியின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், மனம் இறங்கி ரதி தேவிக்கு மாங்கல்ய பிச்சை கொடுத்தார். இதனால் இத்தலம் ரதிவரபுரம் என்று அழைக்கப்படுகிறது.

மாங்கல்ய பிச்சை :

இதற்கான ஆதாரங்களை இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகளிலும், சிலைகளிலும் காணலாம். இக்கருத்தை சித்தரிக்கும் வகையில் இந்த கோவிலில் அழகின் பிறப்பிடமாக விளங்கும் ரதியின் செப்புத்திருமேனி ஒன்று உள்ளது.

இரண்டு கைகளை ஏந்தி இறைவனிடத்தில் தன் கணவனை உயிர்ப் பித்து தரும்படி மாங்கல்ய பிச்சை கேட்ட போது, இறைவன் மாங்கல்ய பிச்சை அளிக்கும் கோலத்தில் கையில் பூவுடன் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ரதி தேவிக்கு சிவன் மாங்கல்ய பிச்சை அளித்த திருத்தலமானதால் இக்கோவில் பிரிந்த தம்பதியினரை சேர்த்து வைக்கும் கோவிலாக திகழ்கிறது.

மேலும் தாம்பத்திய உறவு சரி இல்லாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கிறது என இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதுதவிர காதலர்களை சேர்த்து வைக்கும் தலமாக இத்தலம் விளங்குகிறது. இவ்வாறு சிறப்புகள் வாய்ந்த இத்தலத்தில் தற்சமயம் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

வருகிற பிப்ரவரி மாதம் 10-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த ஊரில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் பவுர்ணமி தினத்தில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் இரண்டாக வெட்டிய ஆமணக்கு செடியை நட்டு வைப்பார்கள். இது சத்தியத்திற்கு கட்டுப்பட்டு 8 நாட்களுக்குள் உயிர்ப்பித்து மீண்டும் தழைத்து விடுகிறது.

தோல் வியாதிகளை நீக்கும் பெருமாள்

இத்தலத்தில் உள்ள இறைவியை ஒவ்வொரு பவுர்ணமியன்றும் வழிபட்டால் அனைத்து விதமான செல்வங்களையும், நீண்ட ஆயுளையும் பெறலாம். இத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாளை வேண்டினால் நினைத்த வரங்கள் கிடைக்கும்.

அத்துடன் தோல் வியாதி உள்ளவர்கள் இத்தலத்து பெருமானை நினைத்து வேண்டினால் எளிதில் தோல் வியாதி நீங்கும். இத்தலத்தில் உள்ள காளிஅம்மன், மாரி அம்மன், திரவுபதி அம்மனை வழிபட்டால் கல்விசெல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் தங்கு தடையின்றி கிடைக்கும் என இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.

அமைவிடம் :


தஞ்சை மாவட்டம் திருவையாறில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திலும், திருமானூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலும், ஏலாக்குறிச்சியில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்திலும், அரியலூரில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ள திருநல்லூரில் கார் கோடேஸ்வரர் கோவில் உள்ளது. தஞ்சையில் இருந்தும், திருவையாறில் இருந்து இத்தலத்திற்கு செல்ல பஸ் வசதி உள்ளது.

No comments:

Post a Comment